சன் டி.வி.யின் 33 சேனல்களின் லைசென்ஸை ரத்து செய்யவும் கோருகிறது உள்துறை அமைச்சகம்!

சன் டி.வி. குழுமத்தின் 33 சேனல்களின் லைசென்ஸ்களை ரத்து செய்யவும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கோருவது என உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் டி.வி. குழுமத்தின் 33 சேனல்களின் ஒளிபரப்புக்கான லைசென்ஸை புதுப்பிக்க மத்திய அரசிடம் அந்நிறுவனம் விண்னப்பித்திருந்தது. ஆனால் உள்துறை அமைச்சகம் சன் டி.வி. குழுமத்துக்கு பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது.

suntv-network

சன் டி.வியின் அதிபர் கலாநிதி மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோர் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அனுமதி சான்றிதழை உள்துறை அமைச்சகம் வழங்க மறுத்திருந்தது. இருப்பினும் இந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகத்தை ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

ஏற்கெனவே இதே சன் டி.வி. குழுமத்தின் 40 எஃப்.எம்.களின் ஒளிபரப்புகளுக்கும் பாதுகாப்பு அனுமதி சான்றிதழை உள்துறை அமைச்சகம் மறுத்த போது ஒளிபரப்புத் துறை அமைச்சர் அருண்ஜேட்லி தலையிட்டு சான்றிதழ் வழங்க கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கை மீது உள்துறை அமைச்சகம் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது.

இதேபோல் தற்போதும் அருண்ஜேட்லி தலையிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக சன் டிவியின் 33 சேனல்களின் ஒளிபரப்பு லைன்சென்ஸ்களை ரத்து செய்யலாம் எனவும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக நியூஸ் மார்க்கெட்ஸ்  இணையதளத்துக்கு உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சன் டிவி குழுமத்துக்கு எதிரான உள்துறை அமைச்சகத்தின் வரும் நாட்களில் தீவிரமடையக் கூடும் எனவும் கூறப்படுகிறது.