Showing posts with label tamil stories. Show all posts
Showing posts with label tamil stories. Show all posts

குட்டிக்கதை

ஆற்றில் வெள்ளம்
கரை புரண்டு ஓடுகிறது.
இக்கரையில் இரண்டு பேர்
நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை.
எப்படி அக்கரைக்குப்
போவது?

இந்த நேரத்தில்
ஒரு காளை மாடு அங்கே வந்தது.
அதுவும் அக்கரைக்குப்
போக வேண்டும்.
ஆனாலும் அதற்கு ஓடம்
எதுவும்
தேவைப்படவில்லை.
அப்படியே ஆற்றில்
பாய்ந்தது... நீந்த
ஆரம்பித்தது. இதைப்
பார்த்த இரண்டு பேரில்
ஒருத்தன் குபீர்
என்று ஆற்றில்
குதித்தான். அந்தக்
காளை மாட்டின் வாலைக்
கெட்டியாகப் பிடித்துக்
கொண்டான்.
காளை மாடு சுலபமாக
அவனை இழுத்துச்
சென்று அக்கரையில்
சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான்.
நமக்கு ஒரு ‘வால்’
கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய்
வந்து ஆற்றில் குதித்தது.
இதுதான் நேரம்
என்று இவனும் ஆற்றில்
விழுந்து அந்த நாயின்
வாலைப் பிடித்துக்
கொண்டான். இந்த
மனிதனையும் இழுத்துக்
கொண்டு நாயால் ஆற்றில்
நீந்த முடியவில்லை.
திணறியது.
ஒரு கட்டத்தில் நாய்,
‘வாள்... வாள்’ என்று கத்த
ஆரம்பித்து விட்டது.
விளைவு _
இருவருமே ஆற்று நீர்
போகும்
திசையிலேயே மிதந்து போய்க்
கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் போக வேண்டிய
திசை வேறு.
போய்க் கொண்டிருக்கிற
திசை வேறு.
கரை சேர நினைக்கிற
மனிதர்களின் கதை இது.
சிலர்
கரையிலேயே நின்று விடுகிறார்கள்.
சிலர் காளையின் வாலைப்
பிடித்துக்
கொள்கிறார்கள். சிலர்
நாயின் வாலைப் பற்றிக்
கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன
சொல்கிறது தெரியுமா?
நீங்கள் கரை சேர
விரும்புகிறீர்களா?
அப்படியானால் எதையும்
பற்றிக் கொள்ளாதீர்கள்.
ஏற்கெனவே பற்றிக்
கொண்டிருப்பதை எல்லாம்
விட்டு விடுங்கள்!

ஆற்றின்
நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.
உள்ளே ஏதாவது பொருள்
இருக்கும் என்கிற
ஆசையில் ஒருத்தன் நீந்திச்
சென்று அதைப்
பற்றுகிறான். நீண்ட நேரம்
ஆகியும்
கரை திரும்பவில்லை.
நடு ஆற்றில் போராடிக்
கொண்டிருக்கிறான்.
கரையில்
நின்று கொண்டிருக்கிற
நண்பர்கள் கத்துகிறார்கள்...
‘‘நண்பா...
கம்பளி மூட்டையை இழுத்துக்
கொண்டு உன்னால் வர
முடியவில்லை என்றால்
பரவாயில்லை...
அதை விட்டுவிடு!’’
ஆற்றின்
நடுவே இருந்து அவன்
அலறுகிறான்: ‘‘நான்
இதை எப்பவோ விட்டுட்டேன்...
இப்ப இதுதான்
என்னை விடமாட்டேங்குது
. ஏன்னா,
இது கம்பளி மூட்டை இல்லே.
கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள்
தடுமாறிப் போகிறார்கள்.
சரியாகப் பற்றுகிறவர்கள்
கரையேறி விடுகிறார்கள்.
பற்றையே விடுகிறவர்கள்
கடவுளாகி விடுகிறார்கள்!

குட்டிக்கதை

ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருவருக்கும் ஒரு விஷயத்தில்
வாய்ச்சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவன் நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான்
.

ஆனால் அறை வாங்கியவன் அதற்கு கோபப்படாமல், அமைதியாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் "இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்" என்று எழுதினான். ஆனால் அது மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

சற்று தூரம் மறுபடியும் இருவரும் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர்.

நடந்ததை மறந்து அவர்கள் இருவரும் தண்ணீரை பருகினர். அப்போது அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பது போன்று இருந்ததது. பார்த்தால் அவன் புதைக்குழிக்குள் சிக்கிக்
கொண்டான்.

அதைக் கண்ட மற்றொருவன் என்ன செய்வதென்று தெரியாமல், கஷ்டப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின் அவனை மேலே தூக்கிவிட்டான். மேலே வந்ததும் அவன் ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்தான். பின் அங்கு இருக்கும் ஒரு சிறு கல்லை எடுத்து, அந்த பெரிய கல்லின் மீது "இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்" என்று தட்டி தட்டி
எழுதினான்.

இதைப்பார்த்த காப்பாற்றிய நண்பனுக்கு ஒன்றும் புரியாமல், "உன்னை அறைந்த போது மணலில் எழுதினாய், இப்போது உன்னை காப்பாற்றிய போது கல்லில் எழுதுகிறாய். இதற்கு
என்ன அர்த்தம்? ஒன்றும் புரியவில்லை" என்று சொல்லி கேட்டான்.

அதற்கு அறை வாங்கிய நண்பன் "யாராவது நம்மை கஷ்டப்படுத்தினால் அவர்களை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு என்னும் காற்று அதை மனதில் இருந்து அழித்துவிடும். அதுவே நமக்கு
யாராவது நல்லது செய்தால், அதை கல்லில் எழுதிவிடு. அது எப்போதும் மனதில் இருந்தது அழியாது" என்று சொன்னான்.

குட்டி கதை 1

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

#ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!