Types of lands in Tamilnadu

ஐவகை நிலங்கள்


  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. நெய்தல்
  5. பாலை

 குறிஞ்சி


தமிழகத்தில் நிலத்தை ஐவகையாக பிரித்து வழங்கி வந்தனர். இதில் முதலாவதாக வருவது குறிஞ்சி ஆகும். இங்கு குறிஞ்சி என அழைக்கப்படுவது மலையும் மலை
சார்ந்த நிலப்பகுதிகளும் ஆகும். இப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி, குறவர் என அழைக்கப்பட்டனர்.
                வேட்டையாடுதல், கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல், தினை பயிரிடுதல், திணை காத்தல் போன்ற தொழில்களைச் செய்தனர். வேட்டைக்கறியும், தேனும், தினை மாவும் இவர்களது முக்கிய உணவுகளாகும். இவர்கள் முருகனை (அருக) கடவுளாக வழிபட்டனர். இந்நில மக்கள் பழங்காலத்திலேயே மூலிகை மருந்துகளையும் அவற்றின் பயன்களையும் அறிந்து பயன்படுத்தி வந்தனர் என தமிழ்க் காப்பியங்கள் மூலம் நாம் அறியலாம். ஆரம்ப காலங்களில் இவர்கள் மலை குகைகளில் வாழ்ந்தனர். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என அழைக்கப்பட்டன.
                குறிஞ்சி நிலப்பகுதிகளில் குரங்கு, கரடி, சிறுத்தை, புலி, யானை, காட்டுப்பன்றி, காட்டு ஆடு போன்ற விலங்குகளும் வேங்கை, திமிசு, தேக்கு, சந்தனம், அகில், அசோகு, மூங்கில், நாகம், கடம்பு, கருங்காலி, பலா போன்ற மரங்களும் குறிஞ்சி, காந்தள், வேங்கை போன்ற மலர் வகைகளும் காணப்படுகின்றன.

முல்லை
  
 இரண்டாவதாக வருவது முல்லை . காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை என வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இந்நிலப்பரப்பில் செம்மண் பரந்து காணப்படுகிறது. எனவே, இது செம்புலம் என அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரை தழுவிப் பெயரிடப்பட்டது.
                கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறு பொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும். இந்நில மக்கள் திருமாலை தெய்வமாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், ஆயர், யாதவர், கோனார் ஆவர். இவர்களின் முக்கிய தொழில் சாமை, வரகு விதைத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவை கூத்தாடல் போன்றவை ஆகும். இப்பகுதிகளில் காணப்படும் முக்கிய விலங்குகள் மான், முயல், பசு போன்றவை.

மருதம்

மூன்றாவதாக வருவது மருதம் நிலம்  ஆகும். இங்கு மருதம் என அழைக்கப்படுவது வயலும், வயல் சார்ந்த இடமும் ஆகும். இந்நிலப்பகுதியானது ஆறு, ஏரி, குளங்களைச் சார்ந்திருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் உழவுத்தொழில் புரிவோர்களாக இருந்தனர். நிலத்தைப் பண்படுத்தி உழுது பயிர் செய்தனர். இவர்கள் இந்திரனை தெய்வமாக வழிபட்டனர்.
                இப்பகுதியில் காஞ்சி, வஞ்சி, மருதம் போன்ற மரங்கள் காணப்பட்டன. இவர்கள் அரிசியை முக்கிய உணவாக உட்கொண்டனர். கரும்பு மற்றும் பிற தானியங்களையும் பயிரிட்டனர். இவர்களின் வசிப்பிடம் பேரூர், மூதூர் என வழங்கப்பட்டன. இங்கு குளங்கள் நிறைந்து காணப்பட்டன. அந்நீர் நிலைகளில் தாமரைப்பூக்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்நிலப்பகுதியின் முக்கிய மலராக தாமரை விளங்குகிறது. குவளைப்பூ, கழுநீர்ப்பூ போன்ற மலர்களும் இங்கு காணப்படுகின்றன.
                எருமை, பசு, நீர் நாய் போன்ற விலங்குகளும், வண்டானம், மகன்றில், நாரை, அன்னம் கம்புள், குருகு, தாறா போன்ற பறவை இனங்களும் இப்பகுதிகளில் அதிகமாக காணப்படுபவை.
                உலக வரலாற்றில் ஆற்றங்கரைகளிலும், ஏரிக்கரைகளிலுமே நாகரீகம் வளர்ந்ததாகக் காண்கிறோம். அதேப் போன்று தமிழருடைய நாகரீகமும், பண்பாடும் இந்த மருத நிலங்களிலேயே ஏற்பட்டன. கைத்தொழில்களும், கல்வியும், கலைகளும், வாணிகமும், செல்வமும், அரசியலும், அமைதியான வாழ்க்கையும் மருத நிலங்களில் செழித்து வளர்ந்தன. மருத நிலத்து மக்கள் கட்டடங்களையும், மாளிகைகளையும், அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரீகமாக வாழ்ந்துள்ளனர்.

நெய்தல்

  நான்காவதாக வரும் நிலப்பரப்பு நெய்தல் ஆகும். நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் பரதவர், சேர்ப்பன், நுளையர், பட்டினவர் என்று அழைக்கப்பட்டனர். நெய்தல் ஊர்கள் பட்டினம், பாக்கம் என அழைக்கப்பட்டன. இம்மக்கள் வருணனை தெய்வமாக வழிபட்டனர்.
                நெய்தல் மண் பயிர் விளைவிக்க ஏற்றதாக இல்லாததால், இவர்கள் மீன்பிடித்தலையே பிரதானத் தொழிலாக கொண்டிருந்தனர். சில இடங்களில் உப்பளங்கள் அமைந்திருந்ததால் உப்பளம் சார்ந்த தொழில்களும் நடைபெற்றன. சில கடற்கரைகளில் துறைமுகங்கள் அமைந்திருந்ததால் வாணிபமும், பிற தொழில்களும் செழித்து வளர்ந்திருந்தன. முத்துக் குளித்தல் இவர்கள் செய்துவந்த மற்றுமொரு தொழிலாகும். மீனையும், உப்பையும் பண்ட மாற்றாகக் கொண்டு தானியங்களை வாங்கி உண்டனர்.
                நெய்தல் நிலத்தில் கண்டல், புன்னை போன்ற மரங்களும் கடற்காகம், புறா, பருந்து, கழுகு போன்ற பறவைகளும் காணபட்டன.

பாலை

 ஐந்தாவதாக வருவது பாலை. பாலை என்பது மணலும், மணல் செறிந்த வெளியும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் மறவர், எயினர் என்று அழைக்கப்பட்டனர். பாலை நிலத்து மக்கள் துர்க்கையை தெய்வமாக வழிபட்டனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் குறும்பு என அழைக்கப்பட்டன.
                இப்பகுதியில் உமிழை, பாலை, ஓமை, இரும்பை போன்ற மரங்களும்: செந்நாய் போன்ற விலங்குகளும்: கிளி, மயில் போன்ற பறவைகளும் இப்பகுதியில் காணப்பபட்டன. இவர்களது தொழில் போர் செய்தல், பகற்சூரையாடுதல் போன்றவை ஆகும்.