ஆல்பர்ட், சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். அப்பா ஹென்றிக்கு அலுத்துவிட்டது. “எதுக்குடா இப்பிடி அடைஞ்சுகிடக்கறே. வெளிய போலாம் வாடா’’ என்று பல முறை சொல்லிவிட்டார். ‘‘இதோ போலாம்ப்பா... ஒரு அஞ்சு நிமிஷம்ப்பா... ம்... சரிப்பா” என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக பதில் சொல்கிறானே தவிர, இடத்தை விட்டு அசையவில்லை. தொலைக்காட்சியை விட்டு பார்வையை எடுக்கவில்லை. ஆல்பர்ட்டுக்கு கோடை விடுமுறை ஆரம்பித்து 10 நாட்கள் ஆகிவிட்டன. அவனது அப்பா, மாதத்தில் 20 நாட்களாவது அலுவலக வேலையாக வெளி மாநிலங்களில் இருப்பார். மீதி 10 நாட்களில் உள்ளூர் வேலைகள், நண்பர்களுடன் அரட்டை என்று இருப்பார். இந்த நான்கு நாட்களாகத்தான் வீட்டில் இருக்கிறார். ஆல்பர்ட்டின், அம்மா, அவரது பிறந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ஆல்பர்ட்டை அழைத்தபோது, ‘அங்கே ஒரே... போர். நான் வரலை’ என்று மறுத்துவிட்டான். ‘‘நான், ஒரு வாரம் லீவில்தான் இருக்கேன். ஆல்பர்ட்டை நானே பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டார் ஹென்றி. உண்மையில், இந்த நான்கு நாட்களாகத்தான் தன் மகனை உற்றுப் பார்க்கிறார் ஹென்றி. ‘அடடா... இவ்வளவு வளர்ந்துவிட்டானா? வேலை வேலை என இதைக்கூட கவனிக்கவில்லையே’ என நினைத்தவருக்கு வெட்கமாக இருந்தது. ஹென்றி, அவரின் சிறு வயது அனுபவங்களை ஆல்பர்ட்டிடம் சொன்னார். தொலைக்காட்சி இல்லாத காலம். கிராமப் பள்ளி முடிந்து வந்தால் விளையாட்டுதான். கண்ணாமூச்சி முதல் பல்லாங்குழி வரை எல்லாமே ஆடுவார். சாப்பாட்டு நேரம் ஆகிவிட்டால், ஒவ்வொரு தெருவாக, வீடாக அம்மா தேடும் வரை விளையாடுவார். ‘கல்லூரி முடித்து, வேலை, குடும்பம் என்று ஆன பிறகும், கொஞ்ச நேரம் கிடைத்தாலும் நண்பர்களைத் தேடிச் செல்ல மனசு துடிக்கிறது. ஆனால், இவன் என்னடா என்றால், செல்போனில் சார்ஜ் தீரும் வரை வீடியோ கேம் விளையாடுகிறான். சார்ஜ் ஏறும் வரை தொலைக்காட்சி பார்க்கிறான். சில சமயம், ஒரு கண் வீடியோ கேமிலும், ஒரு கண் தொலைக்காட்சியிலும் என்று இருக்கிறான்.’ நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. ஹென்றி பொறுமை இழந்தார். “ஆல்பர்ட், நான் வெளியே போகணும்” என்றார். “போயிட்டு வாப்பா” என்றான் ஆல்பர்ட். “உன்னை தனியா விட்டுட்டு எப்படி?’’ “நான் என்ன சின்னப் பையனா?” “உன்னையும் வெளிய கூட்டிட்டுப் போகணும். இப்படி வீட்லே இருக்கிறது நல்லது இல்லடா. உன் பழக்கத்தை மாத்துடா.’’ ஒரு வழியாக, அவனைக் கிளப்பிக்கொண்டு, நடந்தார். கடைத் தெருவுக்குப் போய், வீட்டுச் சாமான்கள் வாங்கினார்கள். கூடவே தின்பண்டங்களும். வீட்டுக்குத் திரும்பும்போது, “சீக்கிரம் வாப்பா” என்றான் ஆல்பர்ட். “ஏன் ஆல்பர்ட்?” “மொபைலை சார்ஜ் போட்டுட்டு வந்தேன்.” “ஓவர் சார்ஜிங் கூடாதுடா. ராத்திரியில தலைக்குப் பக்கத்திலே மொபைல் போன் வெச்சுட்டுத் தூங்கறே. உன்னை நீ நிறைய மாத்திக்கணும். நீ ஏன் இப்படி இருக்கே?’’ ‘‘எப்படி?” “வெளியே போகணும் ஆல்பர்ட். உன்னை நீயே தெரிஞ்சுக்க, வெளியே என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கணும். வெளியில இருக்கிறதுதான் உன்னை இன்னும் சரியா அறிமுகப்படுத்தும். சின்ன வயசுல நான் எப்படி இருந்தேன் தெரியுமா?’’ “அதான் சொன்னீங்களே... உங்க அம்மா சாப்பாட்டை ஊட்டிவிடுவாங்க. அப்பாவோட தோளில் ஏறிட்டுப் போவீங்க. உங்க பாட்டி, நிறையக் கதைகள் சொல்வாங்க. உங்க தாத்தாவோடு கோயிலுக்குப் போவீங்க. சித்தப்பா, பெரியப்பா பசங்களோடு சுத்துவீங்க.” ‘‘அது எல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? வீடியோ கேமிலும் டிவியிலும் அது கிடைக்கவே கிடைக்காதுடா.” “....................” “என்னடா எதுவும் பேசலை?” ‘‘ஆனா அப்பா, எனக்குத்தான் சித்தப்பா பசங்க, பெரியப்பா பசங்கன்னு யாருமே இல்லையே. தாத்தா, பாட்டியும் முதியோர் இல்லத்துல இருக்காங்க. அப்புறம் எப்படி உங்களோட சின்ன வயசு மாதிரி நான் இருக்க முடியும்?” என்றான் ஆல்பர்ட். ஹென்றிக்கு சுருக் எனத் தைத்தது. மகனையே சில நிமிடங்கள் பார்த்தார். ‘மனைவிக்கும் பெத்தவங்களுக்கும் சண்டை என அவங்களை முதியோர் இல்லத்தில் விட்டுட்டு, ஊர் ஊராத் திரியுறோம். தப்பை நம்மகிட்டே வெச்சுக்கிட்டு, இவனை குறை சொல்லிட்டு இருக்கோமே’ என நினைத்தார் ஹென்றி. ‘‘வீட்டுக்குப் போய் பையை வெச்சுட்டு, தாத்தா, பாட்டியைக் கூட்டிட்டு வரலாம்டா. அம்மாகிட்டே பேசறேன். எது எதுவோ மாறிடுச்சு. இத்தனை வருஷத்துல அம்மாவும் மாறி இருப்பாங்க” என்றார். ‘‘உள்ளே மாறினா, வெளியேவும் மாறும்ப்பா. நானும் மாறுவேன் அப்பா” என்ற ஆல்பர்ட்டின் முகத்தில் உற்சாக மின்னல்.