உயிருதிர் காலம்- Tamil short Story

அப்பா அப்படிச் சொன்னதும் மிக வெறுப்பாக இருந்தது.

'விட்றா, இதைப்போயி பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு... எல்லாம் திடமானதுக்கு அப்புறமா ஒரு அஞ்சு நிமிஷ வேலை. திருப்பி உண்டாகப்போகுது. இதுக்குப்போயி எப்பப் பாரு கொரங்கு மாதிரி உர்ர்ருனு ஒக்காந்துகிட்டு, போ... போயி ஒம் பசங்களைப் பாரு...'

அவருக்கு இந்த மானுட வாழ்வின் எல்லாமே அவ்வளவு எளிதானதுதான். எதற்காகவும் அலட்டியோ, ஆர்ப்பரித்தோ பார்த்ததே இல்லை. அதற்காக, எனக்கு நடந்த இவ்வளவு பெரிய சோகத்துக்குமா? என்ன மனிதர் இவர் என்பதுபோல், அவர் நடந்துபோவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஜிம்மி என் கால்களை முகர்ந்து பார்த்து வாலாட்டியது. அப்படியே நெட்டித் தள்ளினேன்.

'நீ வேற ச்சய்ய்ய்...'

ஆறுதல் தேடி இங்கு வந்தது தவறோ என உணர்ந்தேன். வாய்விட்டு அழ வெட்கமாக இருந்தது. ஆம்... எனக்கு ஆசை ஆசையாகப் பிறந்த தேவதை இறந்துவிட்டது... பிறந்த இரண்டே நாட்களில்!

ஒரு ரோஜாப் பூவைப் பறித்து அதை மண்ணில் போட்டு மூடிப்பாருங்கள். அதுவே அவ்வளவு எளிதல்ல எனும்போது, பிங்க் நிறத்தில் குட்டிக் குட்டி கால்விரல்களும் கைவிரல்களும் இளஞ்சிவப்பு உதடுகளும் உருண்டை முகமும் திராட்சைக் கண்களும் என வெண்ணைப் பந்துபோல் உருண்டிருக்கும் கைக்குழந்தையை, மண்ணில் இட்டு மூடவும் செய்தேன் எனும்போது, யோசித்துப்பாருங்கள்.

ஒரே வாரம்தான். பைத்தியம் பிடித்து விடுவதுபோல் இருந்தது. மருத்துவமனையில் இருந்து கிளம்பும்போது கூடை, ஃப்ளாஸ்க்குகளை டிக்கியில் ஏற்றிய கால் டாக்ஸி ஓட்டுநர், குழந்தையை யாரோ தூக்கிவருவார்கள் என இரண்டு நிமிடங்கள் காத்திருந்து, 'போலாம்’ என்றதும் 'குழந்த?’ என அவன் கேட்ட நொடியில், அதுவரை தேக்கிவைத்திருந்த அன்றைய நாளுக்கான அழுகையை வெடித்தாள் இவள். அவளின் வெறுங்கையையும், பால் கசிந்து வெற்றாக ஈரமாகிக்கிடக்கும் மார்புகளையும், பார்த்துப் பார்த்து, பாலூட்ட ஏதுவாக மார்பு பகுதிகளில் ஜிப் வைத்து வாங்கிய நைட்டிகளையும் காணச் சகியாமல், அவளை வீட்டில் விட்டுவிட்டு மாற்றம் தேடி என் கிராமத்துக்கு வந்திருக்கிறேன்.

என் வீட்டில் எங்கு திரும்பினாலும் ஜனம் நடமாடும். அத்தைகள், பெரியம்மாக்கள், அக்கா வகைச் சொந்தங்கள் என. அம்மா மட்டும் என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். அழுகையின் இடையே, ''தேங்காய்த் துவையல் உனக்குப் பிடிக்குமேன்னு செஞ்சுருக்கேன்டா. குளிச்சிட்டு வா...' என எழுந்துபோனாள்.

இரண்டாவது நாளில்தான், அப்பா அந்த வார்த்தைகளைச் சொன்னார்.

இன்னோர் ஐந்து நிமிடங்கள், இன்னொரு பத்து மாதங்கள்... என்ற கணக்கெல்லாம் எனக்கும் தெரியும்தான். ஆனால், மறக்கவே முடியாத அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கண்களை எங்கு போய் தொலைப்பேன்... எப்படி அந்தச் சுகந்தத்தை என் நாசி மறக்கும்?

இதுவரையிலான அப்பாவை, எல்லாவற்றையும் நகைச்சுவையுணர்வு கலந்து யதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் யதார்த்தவாதி என்றே நினைத்திருந்தேன். ஆனால் இந்த நொடியில் கல் நெஞ்சக்காரர் என்றும் நினைக்கத் தொடங்கினேன்.

மனம் இருக்கிறதே, அதைவிடவும் பொல்லாதது வேறொன்றும் இல்லை. நமக்குச் சாதகமான நிகழ்வுகளை வடிகட்டும்; முடிவு செய்யச் சொல்லும். நாம் சந்தோஷமாக இருக்கும் தருணங்களில், எப்போதோ நடந்த சோக நிகழ்வுகளையோ, பிரிந்துபோனவர்களை அதன் அடியாழத்தில் இருந்து துழாவி மேலே கொண்டுவந்து, மூளைக்கு முன் நிறுத்திப் பழிப்புக் காட்டும், கொக்கரிக்கும் ஒன்றைத்தான் நாம் 'மனம்’ என்கிறோம்.

அப்போது நான் ஏழாம் வகுப்பு. வெள்ளைக்கல்லில் இருந்து வரும் சீனி, பெரிய கேரியர் வைத்த சைக்கிளில் பள்ளிக்கு வந்தான். அன்று பள்ளி முழுக்க அவன்தான் கதாநாயகன்.

'டே... லேய்... சீனி ஒரு ரவுண்டுடா...’ என நாங்கள் அவன் பின்னாலேயே மைதானம் முழுக்க ஓட, 'எங்க அப்பா வைவாருடா,’ 'எங்கண்ணன் ஸீட்ல இன்ட்டு போட்டுக் குடுத்துருக்கான்டா’ எனக் காரணங்களை அடுக்கிக்கொண்டே அழுத்தினான். எந்த ஓர் உண்மையான மறுப்புக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும் என்ற ஞானம் அப்போது இல்லை என்பதால், நாங்களும் கெஞ்சிக்கொண்டே ஓடினோம்.

அன்று பிடித்தது சைக்கிள் வெறி. பள்ளியில் இருந்து வீடு வரை 'க்ளிங்... க்ளிங்...’ என வாயில் கத்திக்கொண்டும் கைகளைக் காற்றில் அலசிக்கொண்டும் கற்பனை சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். இதில் அவ்வப்போது ரகுராமனை டபுள்ஸ் வேறு... கற்பனை கேரியரில்.

தினமும் காலை எழுந்தவுடன் அம்மாவிடம் சைக்கிள் குறித்து கேட்க ஆரம்பித்து, அது நச்சரிப்பாக மாறியது. கேட்டுக்கொண்டிருக்கும் போது அப்பா உள்ளே வந்து, 'என்னாது?’ என்பார். ஒன்றும் இல்லை என்பதை சகலவித பாவங்களில் சொல்லி, அங்கிருந்து விலகுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.

'ஏன்டா உர்ர்னு இருக்க?’ - இரவு வீட்டுக்குள் நுழைந்ததும், கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே வந்து, தன் உயரத்துக்கு வாகான இடமாகப் பார்த்து காலை அதில் வைத்து, துண்டால் துடைத்துக்கொண்டே தான் முக்கியமாகக் கேட்க நினைக்கும் விஷயத்தைக் கேட்பது அப்பாவின் வாடிக்கை. காலை மாற்றி வைத்து துடைத்துக்கொண்டே மீண்டும் கேட்டார்.

'கேக்குறேன்ல, ரெண்டு மூணு நாளாவே உர்ர்ருனு எதுவோ தின்ன... எதுவோ மாதிரி இருக்கியே, என்ன விஷயம்?’

நான் பதில் சொல்லப்போவது இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட அம்மாதான், தண்ணீரைக் கொடுத்துக்கொண்டே சொன்னாள்.



'சைக்கிள் வேணுமாம்.’

'என்னாது?’

அந்த 'என்னாது’ சரியாகக் கேட்கவில்லை என்ற அர்த்தத்தில் எல்லாம் இல்லை. விருப்பம் இல்லை என்பதன் மரூஉ.

எனக்கு எங்கிருந்துதான் தைரியம் வந்ததோ,

'எல்லா பயலுகளும் சைக்கிள்ள வர்றாய்ங்க. எனக்கு சைக்கிள் இருந்தாத்தான் ஸ்கூலுக்குப் போவேன்.’

'நம்மூர்ல ஏதுடா ஏழாவது படிக்கும்போதே சைக்கிள்?’

'வெள்ளக்கல்லுல, சீனி...’

அப்பாவின் முகத்தில் வழக்கமான நக்கலும், தனக்குச் சாதகமான பதில் கிடைத்துவிட்ட திருப்தியும் ஒன்று சேர்ந்தது...

'அடப்போடா மடச்சாம்பிராணி, அந்த குண்டு லோகு பய மகன்தானே? அது புல்லுக்கட்டு ஏத்திட்டு வர்ற சைக்கிள்றா.. பெரிய கேரியரா இருந்துருக்குமே?’

அட ஆமாம் என்பதுபோல் என் முகபாவனை.

'என்னைக்காவது புல்லைப் போட்டுட்டு லேட் ஆகுதுனு அப்பிடியே வந்துருப்பான்.’

'டெய்லியும் அதுலதான் வர்றான்.’

பதில் சொல்லவில்லை என்றாலும் உடல்மொழியால், 'அதெல்லாம் இப்போது இல்லை’ என்பதாகக் காட்டிப்போனார்.

மறுநாள் காலையில் ரகுராமன் தலைதெறிக்க ஓடிவந்து, எழுப்பி விஷயத்தைச் சொன்னான்.

'டேய்... பூபதி வீட்டு சைக்கிளை விக்கிறாய்ங்களாம்டா.’

அவ்வளவுதான். மண்டைக்குள் சைக்கிள் வீல் சுற்றத் தொடங்கி, அப்படியே நாளிதழ் படித்துக்கொண்டிருக்கும் அப்பாவின் முன் போய் நிறுத்தியது.

'எந்த பூபதிடா... நம்ம மூர்த்தி மகனா..?’

பதில் இல்லாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

'நீ ஒருத்தன்டா, நெனச்ச உடனே புள்ளப் பெக்கணும்... சரி போய் 'அப்பா வரச் சொன்னாரு’னு சொல்லிக் கூட்டி வா.’

பொதுவாக பூபதியின் வீட்டுக்குச் செல்ல எனக்கு ஐந்து நிமிடங்கள் எடுக்கும்; அன்று இரண்டு நிமிடங்கள்.

பூபதி எங்களைவிடப் பெரியவன். வாயில் நுரை தள்ள பிரஷ்ஷை அதக்கிக்கொண்டே வந்தான். தலையை ஆட்டி 'என்ன?’ என்பதுபோல் கேட்டான்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளைப் பார்த்துக்கொண்டே, 'சைக்கிள வாங்கிக்கிறோம், அப்பா வரச் சொன்னார்.’

புளிச்செனத் துப்பியவன், உள்ளே சென்று சட்டையைப் போட்டுக்கொண்டே நடந்தான்.

'இவங்க அப்பா ஏதாச்சும் கோக்குமாக்காப் பேசுவாரேடா ரகு... விலையைச் சொன்னியா?’

ரகு ஒன்றும் பதில் சொல்லாமல் என்னைப் பார்த்தான்.

'அவர்தான் கூட்டிட்டு வரச் சொன்னாரு பூவதி...’

நான் திரும்பி ஒருமுறை சைக்கிளைப் பார்த்துக்கொண்டே நடந்தேன். பச்சைக் கலர். அட்லஸ் ஸ்டிக்கர் ஒட்டி, ஃபோக்ஸ் கம்பிகளில் சிறு லைட்டுகள் வைத்து, அதை டைனமோவில் இணைத்து... என வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சைக்கிள்.

'என்னா பூபதி, அப்பா கௌம்பிட்டாரா?’

'ஆமா சித்தப்பா... இப்பத்தான்.’

'ம்ம்... என்னா இங்குட்டு காலங்காத்தால, பேப்பர் பார்க்க வந்தியா?’

சொல்லிக்கொண்டே தான் பார்த்துக்கொண்டிருந்த பேப்பரின் நடுப்பக்கத்தை சைஸாகப் பிரித்தெடுத்து நீட்டினார்.

பூபதி என்னையும் ரகுவையும் எரித்துவிடுவதுபோல் பார்த்துக்கொண்டே, 'இல்ல சித்தப்பா, சைக்கிள் வேணும்ட்டு இவன்...’

அவன் முடிக்கும் முன்னரே, 'ஏங் கேக்குற, இதெல்லாம் இப்பவே வேணாம்டா. முட்டியைப் பேத்துக்கிட்டு, பரீட்சை டயத்துலன்னா கேட்டாத்தான...’

'இப்பவே பழகிக்கிட்டா நல்லதுதான’ - பூபதி திடீர் வியாபாரி ஆகியிருந்தான்.

'சரி, எப்பிடினு குடுக்கிறதா உத்தேசம்?’

பூபதி தயங்காமல் சட்டென 'முந்நூறு ரூவா சித்தப்பா.’

'இவன் சைக்கிள்னுதானே சொன்னான். யானைக்குட்டியைக் கொண்டாந்து, இங்க கட்டி எவன்டா தீனியைப் போடுறது?’ - சொல்லிவிட்டுச் சிரித்தார்.

பூபதி வறட்சியாகச் சிரித்தான். அவன் பார்வையைத் தவிர்த்தேன். ஏதாவது பேசி முடித்து, இன்று சைக்கிளில்தான் பள்ளிக்குப் போக வேண்டும். மனம், ஏற்கெனவே சீனியின் பெரிய புல்லுக்கட்டு கேரியருக்குப் பக்கத்தில் அழகான என் பச்சை கலர் சைக்கிள் நின்றுகொண்டிருந்த காட்சியைக் கண்டுகொண்டிருந்தது.

'ஏன்டா அந்தப் பழைய ஓட்ட சைக்கிள்தானடா... நானும் உங்க அப்பனும் அதுல சுத்தாத சுத்தாடா? சரி ஒண்ணு பண்ணு.’

நான், ரகு, பூபதி மூவரும் நிமிர்ந்தோம்.

'சைக்கிள எடுத்துட்டு நேரா மந்தைக்குப் போங்க. அப்பா சொன்னாருனு சொல்லி, நம்ம சைக்கிள் கடை கணேசன்கிட்ட விலையைக் கேளு... முடிவுசெய்வோம்.’

'அதெல்லாம் வேணாம் சித்தப்பா, இருநூத்தி ஐம்பதா குடுங்க... போதும். எதுக்குப் போயி அடுத்தாளுகிட்ட கேட்டுக்கிட்டு?’

உடனே அப்பா என்னைப் பார்த்து, 'பாத்தியா... எவ்வளவு சாமர்த்தியமாப் பேசுறான். நீயும் இருக்கியே’ என்பதுபோல் தலையாட்டி புருவம் உயர்த்திவிட்டு, சற்று அதட்டும் குரலில் பூபதியிடம் சொன்னார்.

'டேய்... பெரிய ஏரோப்பிளேன விக்கிறவன் மாதிரி பேசாதடா... போ, போய் கேட்டு வா.’

'இங்காருடா... 'கணேசன்கிட்ட கேட்டோம். 250 ரூவாய்க்கு வாங்கிக்கச் சொல்லிட்டான்’னு சொல்லிட்டு, இப்பிடியே திரும்பப் போயிருவோம்... என்ன சொல்ற?’ என சைக்கிளை உருட்டிக்கொண்டே பூபதி கேட்டதும், நான் 'சரி’ என்பதுபோல் தலையாட்ட, ரகுதான் காதைக் கடித்தான்.

'டேய், உங்க அப்பா இப்ப பஸ்ஸுக்கு வரும்போது அவன்கிட்ட கேப்பார்... பார்த்துக்க’ - சட்டென பயம் ஆட்கொள்ளவும், 'எதுக்கும் கேட்ருவோம் பூவதி’ என்றேன்.

சைக்கிள் கணேசன் சற்று குள்ளம். தன் பெரிய டவுசரைத் தளர்த்திக்கொண்டே சைக்கிளை ஒரு
சுற்று சுற்றி வந்து, முன் டயரை தன் கால்களுக்கு நடுவில் வைத்து ஹேண்டில் பாரைப் பிடித்து, 'நேராக இருக்கிறதா?’ எனப் பார்த்தான். தடால் என முன் சக்கரத்தைக் கீழே விட்டான். பூபதி பதறினான்.

கீழே கட்டையில் அமர்ந்து, ஸ்டாண்டு போட்ட சைக்கிள் பெடலை வேகமாகச் சுற்ற, சல்ல்ல்லெனப் பின் சக்கரம் சுழன்றது. பிரேக்கைப் பிடித்துப் பிடித்து விட்டு, என ஆலாபனை செய்வதுபோல் செய்து கேரியரின் ஸ்பேனரைத் தட்டிக்கொண்டே, 'ஒரு நானூறு நானூத்தம்பது ரூவாய்க்குப் போகும்’னு அப்பாகிட்ட சொல்லு.’

அவ்வளவுதான். பூபதி, தன் கைலியை இறக்கிவிட்டுக்கொண்டு, ஸீட்டை ஓங்கி ஒரு தட்டு தட்டினான். அவன் கை ஸ்ப்ரிங்போல் மேல் எழுந்து மீண்டும் ஸீட்டைத் தட்டியது. ஒரு முறை பெல்லை அடித்தான்.

'சொன்னேன்ல... என் சைக்கிள் குதுர மாதிரிடா’ எனச் சொல்லிவிட்டு, 'உங்க அப்பாகிட்ட சொல்லிடு. எனக்கு இங்க ஒரு வேலை இருக்கு’ என எதிர் திசையில் சுற்றிக்கொண்டு போய்விட்டான்.

ஒரு நிமிடம் எனக்கு என்ன நடந்தது என்றே யூகிக்க முடியவில்லை. ரகுதான் ஏதோ பேசிக்கொண்டே அழைத்துவந்தான். வரும் வழியெல்லாம் அப்பாவை 'அவனே இருநூத்தம்பதுதான்டா கேட்டான், இவருக்கு ஓசிலயா தருவாய்ங்க, எனக்குனு வந்து வாச்சிருக்கார் பாரு’ எனப் புலம்பிக்கொண்டே வந்தேன். நாங்கள் இருவர் மட்டும் வருவதைப் பார்த்தார் அப்பா.

'என்னடா கடை திறக்கலையா... இல்ல ஓட்ட ஒடசல் வண்டினு ரிப்பேருக்கு விட்டீங்களா?’

'அதெல்லாம் ஒண்ணும் இல்ல...’ என நான் வெறுப்பாகச் சொன்னதும் நிலைமையைச் சமாளிக்கும் விதத்தில் ரகுராமன் விவரத்தைச் சொன்னான். அப்பா தன் தவறை உணர்ந்து வருந்தினால், நன்றாகத் திட்டிவிட வேண்டும் என நிமிர்ந்தேன்.

'இதான், முட்டாப் பயலாவே வளர்ந்தா நான் என்ன பண்றது?’

விழித்தேன்.

'நேராப் போயி 'இந்த சைக்கிள வாங்கலாம்னு இருக்கோம். இவரு இருநூத்தம்பது சொல்றாரு. அப்பா உங்ககிட்ட கேட்டு வரச் சொன்னார்’னு சொல்லிருந்தா, அவன் இருநூறு ரூவாய்க்குத்தான் போகும்னு சொல்லிருப்பான். நீ போயி அங்க ஏதோ செக்கிழுத்த மாடு மாதிரி சைக்கிள விட்டுட்டு நின்னுருப்ப. அவன் நம்ம சைக்கிளாக்கும், கூட விலையைச் சொல்லி விசுவாசத்தைக் காட்டுவோம்னு சொல்லி இருப்பான். போ, போயி பல்லைத் தேய்ச்சுக்கிட்டு வடக்குப் பக்கமா பார்த்து உக்காரு, போ.’

அவ்வளவுதான். அது வரையில் அவரின் தவறு எனத் தோன்றிய மொத்தமும் என் தவறாக மடை மாற்றிவிட்டிருந்தார்.

அதன் பிறகு அம்மாதான் பூபதி வீட்டுக்குப் போய் ஏதோ பேசி அந்தச் சைக்கிளை வாங்கித் தந்ததும், நானும் ரகுராமனும் அதிலேயே சுற்றிக்கொண்டிருந்ததும் வேறு கதை!

ஜிம்மி என் காலை முகர்ந்து பார்த்து, சத்தம் எழுப்பியதும் தேங்காய்த் துவையல் வாசம் உணர்ந்து மெள்ள எழுந்தேன்.

இத்தனை வருடங்கள் கழித்து அந்தச் சைக்கிள் விஷயத்தை நினைத்து மிக லேசாகச் சிரிப்பு வந்தது. அதே சைக்கிள் இப்போது மூலையில் முன் டயர் நெளிந்து, ஸீட்டு இருக்கவேண்டிய இடத்தில் வெறும் கம்பி நீட்டிக்கொண்டு சாய்ந்துகிடக்கிறது. அதன் மீது ஒரு தார்ப்பாய் கிடப்பதால், ஜிம்மி அங்கு போய் பதுங்கிக்கொண்டு தூங்கும் இடமாகிப்போனது.

ஜிம்மிக்கு உடல் முழுவதும் பழுப்பு. மூக்கில் இருந்து கண்கள், கழுத்து வரை மட்டும் வெள்ளைக் கோடு இருக்கும். மிக ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், பல ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் வீட்டில் ஒரு ஜிம்மி இருந்தது. அதற்கு உடல் முழுவதும் வெள்ளைக் கலர். மிகச் சரியாக மூக்கில் இருந்து கண் வரை மட்டும் கறுப்புக் கோடு. அப்பா எங்கோ ஆபீஸ் வேலையாகப் போன இடத்தில் இந்த ஜிம்மியைப் பார்த்ததும், அந்த ஜிம்மி போலவே இருந்ததால் எடுத்து வந்ததாகச் சொன்னார்.

அழுதழுது கண்கள் எல்லாம் வீங்கிப்போய் மிகச் சோர்வாக இருந்ததால், பம்ப்செட்டில் குளித்தேன். வெள்ளாவி பறக்கப் பறக்க சோற்றைத் தட்டில் பரப்பினாள் அம்மா. நிறைய எண்ணெய்விட்டு தேங்காய்த் துவையல் பிசைந்து அவளே ஊட்டினாள். உடல் சூட்டின் காரணமும் ஏதோ ஒரு துக்கம் வெளிப்பட்டுக் கடக்கும் உணர்வும் சேர்ந்து ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடும்போது கண்களின் ஓரங்கள் கசிந்தன.

சாப்பிட்ட அசதியும் இறந்துபோன மொட்டின் நினைவும் கலந்து இம்சிக்க, கொள்ளைப்புறத்தில் அமர்ந்தேன். அருகில் வந்த அம்மாவின் கையில் மாம்பழத்துண்டுகள் நிறைந்த தட்டு. கூடவே ஜிம்மி.

ஒரு துண்டை எடுத்துக்கொண்டே, ''ஏம்மா அப்பா இப்பிடி இருக்காரு?''

'எப்பிடி?' - கேட்டுக்கொண்டே ஒன்றை ஜிம்மிக்குக் கொடுத்தாள்.

அவர் பேசியவற்றைச் சொன்னதும் சிரித்தாள்.

'சரியாத்தானடா சொல்லிருக்காரு.'

நான் ஏதும் பதில் சொல்லாமல் இருந்ததும், பேசினாள்.
'ஒருநாள் ராத்திரி, மழையான மழை. கதவைத் தட்டுறாரு. அப்போ அவருக்கு வெளியூருல உத்தியோகம். வாரத்துக்கு ஒரு நாள்தான் வருவாரு. 'என்ன இது இந்த மழையில இப்பிடித் திடீர்னு வந்துருக்கீங்க?’னு கேட்டா, 'பொம்பளப் பிள்ளைங்களா பொறந்திருக்கேன்னு யோசிச்சுட்டு படுத்திருந்தேன். திடீர்னு ஏதோ ஒரு அசரீரி. அதான்’கிறார். மறுநாளே விடிஞ்சும் விடியாம பிளாரன்ஸ் டாக்டர்கிட்ட போனா, ஆச்சர்யம் தாங்கலை... நான் மாசமா இருக்கிறது கன்ஃபர்ம் ஆச்சு. அவருக்குத் தோணுன மாதிரி ஆம்பளப் பிள்ளதான். அப்பிடி இப்பிடி என்னைய நகரவிடல. பெத்தேன்டா ஒரு பிள்ளைய. அப்பிடியே ராஜகுமாரன் மாதிரி. மடி நிறையக் கெடப்பான்; கொழுகொழுனு. இந்த வீதியே அவனைத் தூக்கிட்டுப் போய்க் கொஞ்சும். வெள்ளை ஜிம்மி வாய்க்குள் கைய விடுவான். அது அவனை நக்கிக்கொடுக்கும். யாருமே இல்லாட்டியும் ஜிம்மி இருந்தா போதும். அவரு ஒரு வருஷமா வேலைக்கே போகலை. 'பிள்ள பிள்ள’னு... அழகுன்னா அழகு அப்பிடி ஓர் அழகு அந்தப் பிள்ள.

ஒரு வருஷம் நெறையுது. ஊரையே கூட்டி சோறு போடுவோம்னு எல்லா ஏற்பாடும் ஆகிருச்சு. 'சோழவந்தானுக்குப் போய் தோட்டத்துக் காயை எடுத்துட்டு வர்றேன்’னு போய்ட்டாரு.

திடீர்னு பிள்ளைக்கு விக்கல். இங்க இருக்கிறவங்க எல்லாம் தொக்கம் விழுந்துருச்சு. எடுக்கணும்னு விளாச்சேரி, மதிச்சியம்னு கூட்டிப் போய்ட்டு, பெரியார் பஸ் ஸ்டாண்டு விஜயலட்சுமி டாக்டர்கிட்ட கடைசியா கூட்டிப் போனாங்க. பெத்த மனசுக்குள்ள சங்கடம். ஆனா நான் வாயைத் திறக்கலையே.

அந்த டாக்டர், 'இப்பிடி அழகுப்பிள்ளய தொக்கம் கிக்கம்னு கொண்டுபுட்டீங்களே’னு திட்டிட்டு எடுத்துட்டுப் போகச் சொல்லிட்டாங்க. ரிக்‌ஷாவுல எம் மடி நெறையக் கெடக்கான் பிள்ள. கொண்டாந்து போட்டுட்டு அந்தா... அந்த மூலையில போய் உக்காந்துட்டேன்.

இந்த ஊர் மொத்த ஜனமும் பிள்ள சவத்து முன்னால அழுகுது. உங்க அப்பா அழுத அழுகையை எவனாலயும் நிறுத்த முடியலை. வேற யாரோதான் தூக்கிட்டுப் போகணும்னு ஐதீகம். ஆனா, இவரு நான்தான் தூக்கிட்டுப் போவேன்னு அழுதுக்கிட்டே தூக்கிட்டுப் போனார். அன்னிக்கோட அழுகைனா என்னானு போச்சு அவருக்கு. நீயாவது நாலாவது நாள்ல துவையல், மாம்பழம்னு திங்கிற... ஒரு மாசம். ஆமா, எதுவுமே சாப்புடல அவரு. செத்துப் போய்ட்டாருனுதான் நெனச்சோம். அப்புறம்... இந்தப் பொம்பளப் பிள்ளகளைப் பெத்துருக்கோமேனு கொஞ்சம் போல கஞ்சி குடிச்சார். மெள்ள மெள்ள சரியானார். அப்புறம் நீ பொறந்த. பூர்ணமாயிட்டார். நீன்னா உசுரு அவருக்கு. எவ்வளவு பொம்மைங்க, எவ்வளவு சட்டைங்க. நீ கேட்டியேன்னு அந்த ஓட்ட சைக்கிளை நானுத்தம்பது ரூவாய, என் கையில குடுத்து 'போயி பூபதி வீட்ல உடனே குடுத்துட்டு வா’னு... ஒரே வெரட்டு!'

பாதி மாம்பழத்தை கையில் பிடித்திருந்தேன். அதைக் கீழே எறிந்தேன். என் முகத்தைப் பார்க்காமல் அம்மா எழுந்து உள்ளே போனாள். நான் எறிந்த மாம்பழத் துண்டை ஜிம்மி முகர்ந்து பார்த்தது.

மிக பலவீனமாக உணர்ந்தேன். அப்படியே அமர்ந்திருந்தேன். இரவாகிவிட்டது.

''ஏன்டா உர்ர்ருனு இருக்க, ஏதாவது சாப்டியா... இல்லியா?' ஈரக் காலைத் துண்டால் துடைத்துக்கொண்டே அப்பா கேட்கவும் உடைந்துபோய் அழத் தொடங்கினேன்.

'ஜென்மம்னு எடுத்தா இதெல்லாம்தான்டா'- நான் எனக்காக அழுவதாக நினைத்துக்கொண்டு என்னைத் தேற்றினார் அப்பா.

முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து சற்று காலாற நடந்தேன். ரகுராமனும் வேலையைவிட்டு வந்திருந்தான். இருவரும் ஊருக்கு வெளியே இருக்கும் பொட்டலுக்குப் போனோம். இரவில் இப்படி அமர்ந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. எங்களோடு ஜிம்மியும் ஓடி வந்தது.

பொட்டலில் வெற்றிலையை நீவி, புகையிலையைக் கசக்கி அதக்கிக்கொண்டிருந்த சொக்கு, என்னைப் பார்த்ததும் அருகில் வந்தார். சாராய நெடி. சுடுகாட்டிலேயே இருக்க இதெல்லாம் வேண்டும்தான்.

'எப்ப வந்தீக?'

'நேத்து... சொகமா?'

'நமக்கு என்ன, வர்ற உருப்படிகளைத் தூக்கிப்போட்டு எரிச்சு சாம்பலைப் பார்க்குறதுன்னு போகுது...'

சொல்லிக்கொண்டே ஜிம்மியைப் பார்த்தார்.

''நானும் எம்புட்டு பொணத்தைப் பார்த்துருக்கேன். வர்றவன் எல்லாம் கொள்ளியை வெச்சுட்டு, நானும் இப்பவே சாகப்போறேன்ம்பான். ஒருத்தனும் செத்தது கெடையாது.''

புகையிலையைக் கரகரவெனக் கசக்கி, வாயின் உட்புறமாக அதக்கினார்.

'ஆனா, நாய்கன்னா நாய்கதான். ஹூம்... இருவது முப்பது வருஷத்துக்கு முந்தி இருக்கும். உங்க வீட்ல ஒரு சின்னக் கொழந்த கேதம். உங்க அப்பாரு அழுது பொதச்சுப் போனாரு. பாவம். எல்லாரும் போய்ட்டாக. உங்க வீட்டு நாய் மட்டும் போவனாங்குது. குழியைக் குழியைத் தோண்டுது. நானும் அடிக்கிறேன், வெரட்டுறேன். அசங்கலயே.'

ஒரு நிமிட மௌனத்துக்குப் பிறகு சொன்னார்.

'ஒரு வாரம், பத்து நாள் பச்சத்தண்ணிகூடக் குடிக்காம அந்தப் பயலைப் பொதச்ச எடத்துலயே படுத்துக்கெடந்து செத்துப்போச்சு.'

ஜிம்மி என் கால்களுக்கு அடியில் குழைந்தது. அப்பாவைப் பார்க்க வேண்டும்போல் இருக்கவும், வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்!