சோற்றுக்கற்றாழை - Alvera(Aloe Vera)

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.


Search Keywords: Health benefits of Alvera, Alvera, சோற்றுக்கற்றாழை