வேப்பமரம்



வேப்பமரம் (வேம்பு) இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. தற்போது உலகின் தென் கிழக்கு ஆசியா, அந்தமான், பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியாவின் வெப்பப்பகுதி மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இது வளர்க்கப்படுகிறது. இம்மரம் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் வளர்கின்றன. இம்மரம் களிமண், கரிசல் மண் நிலங்களில் வளர்ந்தாலும் மண் ஆழமில்லாத நிலங்கள், சரளை நிலங்கள் மற்றும் உவர் நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. களர் நிலங்களிலும் வளரும். ஆனால், நீர் தேங்கி நிற்கும் பகுதி மற்றும் பனிப்பிரதேசத்தில் சரியாக வளர்வதில்லை.
      வேப்ப மரம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். வறட்சி பகுதிகளில் இலைகள் உதிர்ந்து கோடைக்காலத்தில் புதிய தளிர்களுடன் காட்சியளிக்கும். இது 40- 50 அடி உயரம் வரை வளரக்கூடிய ஒரு பெரிய மரமாகும். இதன் அடிமரம் நேராகவும், பருத்தும் இருப்பதுடன் குடை போன்ற கிளை மற்றும் உச்சி அமைப்பைக் கொண்டது. இது ஆழமான வேர் அமைப்பைக் கொண்டதால் எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரும் சிறப்பியல்பைக் கொண்டது. மேலும் இது வெட்ட வெட்ட தழைக்கும் தன்மைக் கொண்டதால் சமூக நலக்காடு வளர்ப்புத் திட்டத்தில் இதனைப் பெருவாரியாக பயன்படுத்தி பலனடையலாம்.
      வேம்பு, வீடு கட்டுமான பொருட்களும், கலப்பை போன்ற விவசாய கருவிகளுக்கும், இருக்கைகள் செய்வதற்கும், பலகைகள் செய்யவும் உதவுகிறது. மர வேலைப்பாடுகளுக்கும் ஏற்றது.
      வறட்சிப் பகுதிகளில் கால்நடைகளுக்கு இது ஒரு சிறந்த பசுந்தீவனமாக பயன்படுகிறது. 25 உயரமுள்ள ஒரு நடுத்தர மரம் ஆண்டுக்கு 350 கிலோ அளவிற்கு இலைகளைக் கொடுக்க வல்லது. இலையில் புரதச் சத்தும், தாது உப்புக்களும் மருத்துவப் பொருட்களும் உள்ளது. சிறந்த பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது. இதனுடைய இலைகள் காற்றை சுத்திகரிக்கவும், சத்தத்தைக் கட்டுப்படுத்தவும் கோடையில் நல்ல சுகாதாரமான நிழலைத் தரவும் உதவுகிறது. இது ஜனவரி முதல் மே மாதம் வரை பூத்துக் குலுங்கும். இடத்திற்கு இடம் பூக்கும் பருவம் மாறுபடலாம்.
      ஒரு மரத்திலிருந்து 3.7 முதல் 55 கிலோ பழமும், அவற்றிலிருந்து 40 சதவீத அளவிற்கு விதையும் (கொட்டை) அக்கொட்டையிலிருந்து 45 சதவீத அளவில் எண்ணையும் கிடைக்கும். எண்ணை எடுத்தபின் பிண்ணாக்கு கிடைக்கிறது. இது சிறந்த உரமாக பயன்படுகிறது. வேப்ப எண்ணெய் சோப்பு தயாரிக்கவும் அதனை சுத்திகரித்து மருந்துகள் செய்யவும் பயன்படுகிறது. எனவே, இது ஒரு சிறந்த பலன் தரக்கூடிய அரும்பெரும் மரமாகும். வேப்ப விதைகளின் முளைப்பு திறன் 2 முதல் 3 வாரங்களுக்குத்தான் இருக்கும். அதன் பின் சரியாக முளைப்பதில்லை. விதைகளைச் சேகரித்தவுடன் விதைத்துவிட வேண்டும்.
      வளர்ந்த நாற்றுகளை நட்ட 6 - 7 ஆண்டுகளில் பூத்து காய்க்க ஆரம்பித்து விடும். 10 வது ஆண்டிலிருந்து அதிக அளவில் சீரான மகசூல் பெற முடியும். சராசரியாக ஒரு மரத்திலிருந்து 50 கிலோ அளவில் பழமும் 20 கிலோ விதையும் கிடைக்கும். எவ்வளவு கடுமையான வறட்சியினாலும் எங்கும் பச்சையைப் பார்க்க முடியாத நிலையிலும் இம்மரம் பசுமையாக நின்று நல்ல நிழலும், பசுந்தீவனமும் தருவதுடன் ஒரு மரத்திலிருந்து சுமாராக 20 கிலோ விதையினையும் தரவல்லது.